பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாள்

தமிழர்களின் பாரம்பரிய திருவிழா என்றால் அது தைத்திங்கள் முதல்நாளில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தான். ஏன் இதை தமிழரின் அடையாளம் என்றே கூறலாம். இத்திருநாள் சங்க காலம் முதல் கொண்டாடப்பட்டுவருவதை இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம்.

என்னுடைய பள்ளிப்பருவத்தில் பொங்கல் திருநாள் அரையாண்டு விடுமுறைக்கு பின் வரும் நீண்ட விடுமுறையாகும். அப்பாடா…விடுமுறை வருகிறது என்று நினைக்குபோதே அதனுடனே அரையாண்டு தேர்வு விடைத்தாளும் மதிப்பெண் அட்டையும் வந்துவிடும். விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது அதில் அப்பாவிடம் கையெழுது வாங்கி வகுப்பாசிரியரிடம் திருப்பி தரவேண்டும்.

பொங்கலுக்கு ஒருவாரம் முன்னரே வீடுமுழுவதும் வெள்ளையடிக்க தொடங்குவார்கள். பின்னர் அரிசி பானையில் இருக்கும் பழைய அரிசியை காலிசெய்துவிட்டு நெல் குத்தி புதிய அரிசியை நிறப்புவர். வெள்ளையடித்தபின் ஜன்னல் மற்றும் கதவுகளுக்கான புதிய வண்ணத்தை தேர்வுசெய்வதில் உடன்பிறப்பிற்கும் நமக்கும் ஏற்படும் போட்டி இருக்கிறதே… இறுதியில் அவள் இளையவள் தானே  நீதான் விட்டுகொடுத்து போகவேண்டும் என்று அப்பாவின் ஆறுதலுடன் வெற்றிபெருவதென்னவோ இளையவள் தான்.

புத்தாடைகள் – ஆயத்த ஆடைகள் என்றால் என்னவென்றே தெரியாத அக்காலங்களில் புத்தாண்டு தொடங்கியவுடன் பெற்றோரை நச்சரித்து முதல் வாரத்திலேயே துணி வாங்கினால் தான் அவற்றை தையல்காரரிடம் கொடுத்து பொங்கலுக்கு முன் தைத்து வாங்க முடியும்.

அதோடில்லாமல் துணி கடையின் புதிய கைப்பையுடன் அடுத்த நாள் பள்ளிக்கு சென்று நண்பர்களிடம் புத்தாடை வாங்கியாகிவிட்டது என்று ஆர்ப்பரிக்கும் சுகமே தனி…

தையல்காரரிடம் ஸ்டைல் என்னும் பேரில் சட்டையின் கைகளில் மடிச்சு தைக்கவேடண்டும்.. முதுகினில் பிளீட்டு வைக்கவேண்டும் கால்சட்டையின் பின்னால் ஒரு பாக்கெட் வைக்கவேண்டும் என்று அந்நாளில் நடத்திய கோமாளித் தனங்கள் மற்றும் அவைகொடுத்த மகிழ்ச்சி எண்ணில் அடங்காதவை…

பொங்கல் வாழ்த்து: ஒரு வாரம் முன்பிருந்தே நண்பர்களிடம் முகவரி வேட்டை தொடங்கிவிடும். வகுப்பில் நட்பு வட்டம் முடிந்து தெரிந்தவர் வட்டம் முடிந்து போகிப்பண்டிகைக்கு முன்னாள் பள்ளி அரை  நாள் மட்டுமே நடைபெருமன்று இவனுக சகவாசமே வச்சுக்க கூடாது என நினைத்த சக மாணவர்களிடமும் தயக்கத்துடன் சென்று முகவரிகளை சேகரித்து…  பின்னர் மொத்தம் எத்தனை வாழ்த்து அட்டைகள் வாங்க்க வேண்டும் எனறு கணக்கெடுத்து பின்னர் “ பொங்கல் பானை, எம்ஜிர் சிவாஜி ரஜினி கமல்” என வாழ்த்து அட்டைகளை தேர்ந்தெடுத்து எதை யாருக்கு அனுப்புவது என முடிவெடுத்து அவற்றில் முகவரி எழுதி தபால் நிலையம் சென்று ஸ்டாம்பு ஒட்டி போகி பண்டிகையன்று தபால்பெட்டியில் சேர்த்தால் தான் அவை மாட்டுபொங்கலன்று சென்றடையும்.

ஒருவழியாக வாழ்த்து அட்டைகள் வேலையை முடித்த பின்னர் பாட்டியுடன் மாலை புதிய பானை வாங்க செல்லவேண்டும். பாட்டியோ அருகில் இருக்கும் பானை கடைகளை விட்டுவிட்டு தொலைதூரம் சென்று கொசத் தெருவிலிருக்கும் என் தாத்தாவின் மாணவனான ஒரு குயவனிடமே அடாவடி பேரம்பேசி வாங்குவாள். ஏன் இவ்வளவு தூரம் வந்து அந்த குயவனிடம் வாங்குகிறீர்க்ள் என கேட்டால்…  பாட்டி அந்த குயவனிடம் முதன்முதலில் பானை வாங்கிய வருடம் என் அம்மாவின் திருமணம் நடந்ததால்…அதுமுதல் அவனிடம் பானை வாங்கினால் நல்லது நடக்கும் என்னும் பாட்டியின் குருட்டு நம்பிக்கையை என்னவென்று சொல்வது?

மாலையில் வெளியூரில் வேலை செய்யும் மாமா தன் குடும்பதுடன் வீடு வந்து சேருவார். இப்படியாக பண்டிகையை முன்னிட்டு வீடே களை கட்டிவிடும்.

இரவு பொங்கலுக்கு கோலம் போடும் நிகழ்வு – மீண்டும் உடன்பிறப்புடன் போட்டிக்கு தயாராகும் நேரம்… கோலப்புத்தகத்தில் யார் தேர்ந்தெடுத்த கோலம் போடுவார்கள் என்பதுமுதல் கோலத்தில் யார் வண்ணமிடுவது என்பதுவரை ஏற்படும் வெற்றி தோல்விகள்…  கோலம் போடுவது பெண்களின் வேலை. நீ ஏன் அதில் போட்டிபோடுகிறாய் – என அப்பாவின் ஆறுதல்…

இவ்வாறாக மகிழ்ச்சி கொந்தளிக்கும் வேளையில் அடிமனதில் புத்தக பையில் உள்ள அரையாண்டு விடைத்தாள்களும் மதிப்பெண் அட்டையும் நினைவில் வந்து மகிழ்ச்சிக்கு ஒரு அணை போடும்…

பொங்கல் தினத்தன்று அதிகாலையிலே குளித்து சூரியோதயத்தின் போது சூரியன் ரதத்தில் வருவது போல் வாசலில் கோலமிட்டு,மாவிலை தோரணங்கள் கட்டி சூரியனை வரவேற்று பொங்கல் திருநாள் தொடங்கும்.

அதன்பின்னர் அடுப்பில் புதிய பானையில் பாலை ஊற்றி அது பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று அந்த தெருவிற்கே கேட்கும் விதமாக கூப்பாடு போடுவதில் தான் எத்தனை அலாதி…

பொங்கிய பானைகளை மீண்டும் சூரியனுக்கு படைத்து தாத்தா கற்பூர ஆரத்தியின்போது நிறைய மார்க்கு வாங்கவேண்டும் என வேண்டிக்கொள் என்பார்.. ஆனால் நானோ  நான் இளையவளாக வேண்டும்.. இளையவள் என்னிடத்திற்கு வரவேண்டும். அப்போழுது தான் என் மனம் படும் வேதனைகள் அவளுக்கு புரியும் என மனதில் வேண்டிக்கொள்வேன்.

பொங்கிய சோரும், 8 வகை பயிர்களுடன் கூடிய குழம்பும் பாட்டியின் கைப்பக்குவம் தந்த சுவை…

மாலையில் ( தொலைக்காட்சி எங்கள் வீட்டிற்கு வராத காலம்) அனைவரும் வீட்டு வாசலில் உக்கார்ந்து அளவளாவுவதில் இருந்த சுகம்…

அடுத்த நாள் மாட்டு பொங்கல். காலையிலேயே எங்க வீட்டு ஆள்காரன் அவன் மாடுகளுக்கும், மாட்டு வண்டிக்கும் வர்ணம் அடிக்கவும், புதிய மூக்கனாங்கயிறு வாங்கவும் என் தாத்தாவிடம் வந்து கதைபேசி.. அவரிடம் கொஞ்சம் திட்டும் வாங்கிக்கொண்டு இறுதியில் 50ரூபாய் வாங்கிச்செல்வான்.

பின்னர் பத்து மணிக்கு மேல் வரும் தபால்கார்ரை வரவேற்க தயராக வேண்டும். எங்கள் வீட்டிலிருந்து பொங்கல் மரியாதை பெரும் முதல் நபர் அவர்தான். தாத்தா அன்று காலையிலேயே என்னிடம் ஒரு கணக்கு  நோட்டினை கொடுத்து பிள்ளையார் சுழியிட்டு தொடங்கி பொங்கல் மரியாதை கொடுத்த கணக்கெழுத வேண்டும்.

தபால்கார்ர் வந்தவுடன் அவரை வீட்டுக்குள் அழைத்து உட்கார சொல்லி அவருக்கு பொங்கல் மரியாதை கொடுத்து காபியும் கொடுத்து அவரை கெளரவிப்பர். பின்னர் அவர் கொண்டுவந்துள்ள வாழ்த்து அட்டைகளை பெருவதில் அடையும் பெருமிதம் சொல்லிலடங்கா..

வாழ்த்து அட்டைகளை பிரித்து நாம் அனுப்பிய அனைவரும் நமக்கு அனுப்பியுள்ளனரா… யார் அனுப்பவில்லை.. மற்றும் நாம் அனுப்பாத நபர் நமக்கு அனுப்பியுள்ளாரா என்பதை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்வதற்குள் மாலை ஆகிவிடும்.

படையலிட்டு உணவினை முடித்த பின்னர் தாத்தா புத்தாடைகளை வழங்குவார். அவற்றை வங்கி அணிந்து வாசலில் அமர்ந்து தெருவில் செல்லும் வண்ணம் பூசிய மாடுகளையும் மாட்டு வண்டிகளில் கூப்பாடு போட்டுச்செல்லும் சிறுவர்களையும் பார்த்து எங்க்ள் வீட்டு ஆள்காரன் வண்டிக்காக காத்திருந்து அவன் வந்தவுடன் வண்டியில் தாவி ஏறி புறப்படலாம் என்றால்…பாட்டி அவனை சாப்பிட்டு செல்லுமாறு வற்புருத்துவாள். அவனும் அவசர அவசரமாக சாப்பிட்டு வண்டியை கிளப்புவான். நாமும் மற்ற வண்டிகளை போன்று கூப்பாடு போட்டு.. மற்ற வண்டிகளுடன் போட்டி போட்டு நான்கு வீதிகளில் வலம் வந்து பின்னர் வீடு திரும்பினால்.. பாட்டி வாசலிலேயே காத்திருந்து ஆலம் சுற்றுவாள்.

காணும் பொங்கல் – காலையிலேயே தயிர்சாதம் படைத்து பண்டிகை கொண்டாட்டங்கள் முடிவுக்கு வரும். அதன்பின்னார் பொங்கல் மரியாதை வாங்க வெட்டியான், பால்காரன், பேப்பர்காரன், தெரு பெருக்கரவன், காவாய் அள்ரவன்னு ஒரு கூட்டமாய் வந்து பெற்று செல்வர். என் தாத்தா வாசலில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து நான் வலது பக்கமாய் கணக்கு நோட்டுடன்.. இடது பக்கம் உடன்பிறப்பு பணப்பையுடன்.

மாலையில் ஆள்காரன் வருவான்.. பொங்கலன்று படையலிட்ட கரும்பினை உடைத்து நன்றாக தோல்சீவி சிறு துண்டுகளாக்கி கொடுப்பான். பொங்கல் மரியாதையும் இந்த ஆண்டிற்கான புதிய கூலியின் முன்பணமும் வாங்கிச் செல்வான். இத்துடன் பொங்கல் மரியாதை கணக்கு முடிக்கப்படும். பணப்பையில் மீதமுள்ளா பணம், என் கணக்கும் ஒத்து போகவேண்டும். இல்லையென்றால் உடன்பிறப்புடன் மீண்டும் ஒரு களேபரம் தான்…

பண்டிகைக்கு வந்த மாமா குடும்பம் மாலையில் கிளம்பிச் செல்வர். பின்னர் வீடு சகஜ நிலைக்கு வரும்.. நமது புத்தகபையும் நமக்கு நினைவுக்கு வரும்.. வீட்டுபாடம்… மதிப்பெண் பட்டியல்… அடுத்த நாள் காலை பள்ளி என சகஜ வாழ்க்கை தொடரும்…

இத்தகைய பழமைமிக்க திருநாள் இப்போழுது எப்படி கொண்டாடப்படுகிறது?

இன்றைய தலைமுறையினருக்கு நெல் என்றால் என்னவென்றே தெரியாது. வெள்ளையடித்தல் என்பது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை  நடைபெரும். தையல்கார் என்பவர் பள்ளி சீருடைகள் மட்டுமே தைப்பவர். பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு ஆயத்த ஆடை கடைக்கு சென்று விரும்பும் உடை நமக்கு பத்தாது.. பத்தும் உடை நமக்கு பிடிக்காது.. ஏதோ வாங்கவேண்டுமே என்று சில ஆயிரங்களில் ஒரு உடை.

வாழ்த்துக்கள் வாட்ஸ்-ஆப்புகளிலும் கண்சிமிட்டி மறைகின்றன..  மின்னஞ்சல்களையே மற்நதுவிட்ட நாம். தபால்காரர் என்றால் என்ன என்று கேட்பதில் வியப்பேதும் இல்லை. குயவனிடம் தட்டிபார்த்து வாங்கும் மண்பானையும்  தேடித்தேடி பார்த்து வாங்கும் அடிக்கரும்பும், மாமரதிலிருந்து பரித்து அழகாய் தொடுத்த மாவிலை தோரணமுன் இன்று அமேசான் பொங்கல் ஸ்டோரில்…

இன்றய தலைமுறையினரை பொருத்த வரையில் பொங்கல் என்பது “ Just another holiday”  சன் டீவியில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். பானைகளும் இல்லை அவற்றில் பால் பொங்குவதுமில்லை.

Loading

Facebook Comments
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: